ஊடக வியாபாரம் அல்லது அரசியல்

கைகள் கட்டப் பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும்  காட்சிகள் உலகின் பல தொலைக்காட்சிகளிலும் இணையத் தளங்களிலும்  மீள்பதிவாகிக் கொண்டிருக்கிறது. எனது நண்பர் ஒருவர் டெல்லியில் இருந்து தொலைபேசினார். ‘ நான் நினைக்கவில்லை இத்தனை கொடுமைக்காரார்களாக சிங்கள ராணுவத்தினர் இருப்பார்கள் என்று. ஈராகில் அமெரிக்க படைகள் செய்த கொடுமைகளை விட கொடுமைகளையெல்லாம் செய்வார்கள் போலிருக்கிறதே’ என்றார் அப்பாவியாக. என்னுடைய அந்த நண்பர் அத்தனை அரசியல் அறிவு இல்லாத அப்பாவியல்ல. இந்தியாவில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் உரிமைக்காக போராடிவரும்  மாரத்திக்காரரான  அந்த நண்பருக்கு  சிங்கள ராணுவம் இத்தனை கொடுமைகளைச் செய்யும் என்பதை இவ்வளவு தெளிவாக எந்த ஊடகமும் அண்மைக் காலத்தில் சொல்லியிருக்கவில்லைப் போலும்.

ஈராக்கிலும் ஆப்கானிலும் நடந்த கொடுமைகளை அல்ஜசீரா மூலம்  உலகம் கண்டது. இப்போது ஈழத்தில் நடந்த கொடுமைகளை சனல் 4 தொலைக்காட்சி கொண்டுவந்திருக்கிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் பல தரப்பு அச்சுறுதல்கள் காரணமாக உள்நாட்டு ஊடகங்களின் நம்பகத்தன்மை  தவிர்க்கவியலாதபடி கேள்விக்குள்ளாகும். அப்போது குறைந்த பட்ச நம்பிக்கை தருபவை வெளிநாட்டு ஊடகங்கள் எனபது மறுக்கவியலத உண்மை. என் நண்பர் சொன்னது போல் சிங்கள் ராணுவம் இத்தனை கொடுமையானது என்பதை உலகுக்கு உணர்த்திய முக்கிய பங்கினை சனல் 4 தொலைக்காட்சி செய்திருக்கிறது.  நான் அந்த நண்பருக்கு சொன்னேன். சிங்கள  மற்றும் அமெரிக்க ராணுவங்களின் கொடுமைகளை நீங்கள் இப்போது நிறைய அறிந்திருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேட்டால் ரணுவங்களுக்குள் பேதமில்லை அவைகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கிறன. அதேபோல் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதில் ஊடகங்களும் தெளிவாகவே இருக்கின்றன.

உண்மையில் போர்க் காலத்தில் எல்லா ராணுவங்களும் கட்டுபாடுகள் இல்லது போனாலோ அல்லது அரசு வழங்கும் அதிகாரம் எல்லை மீறினாலோ மிகக் கொடுமைகள் செய்பவைகளாகத்தான் இருக்கும்.  இலங்கை மற்றும் இந்திய ராணுவங்களின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்த ஈழத்த தமிழருக்கு இந்த இரண்டு ராணுவத்தினருக்கும் இடையிலான வித்தியாசம் அதிகம் இல்லை என்பதை  தெளிவாகச் சொல்ல முடியும் என அந்த  டெல்லி நண்பருக்கு நான் சொன்னேன். அவர் எனக்கு கனத்த மௌனத்தைப் பதிலாகத் தந்தார். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர்  இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகளையே அதிகம் பாத்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

இதேபோல மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் ஒருவர் பேசிய கூட்டம் ஒன்றிற்க்கு சில காலம் முன்பு சென்றிருந்தேன். அவர் ஆப்கானில் ஆரம்பித்து ஈராக்,ஜோர்டான் போர்களில் எல்லாம் அமெரிக்கா ஏகாதிபத்தியமும் மேற்குலக அதிகார மையங்களின் அத்து மீறல்களும் எத்தனை  கொடுமைகளுக்கு காரணமானவைகளாக இருந்தன.  இந்த கொடுமைகளையெல்லாம் மறைத்து அமெரிக்கா விரும்பும் கருத்தை  ஓதுபவைகளாகவும் அடிவருடிகளாகவும் மேற்குலக ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை விளக்கினார். மேற்குலகுக்கு எதிரான மாற்று  ஊடகங்கள் மற்றும் சில இந்திய ஊடகங்கங்கள் மூலம் இந்த நாடுகளில் நடந்த கொடுமைகளின் உண்மைகளை அறிய முடிந்த போதுதான் இத்தனை மோசமான வன்முறையின் உண்மை நிலவரம்  தெரிய வந்ததாகச் சொன்னார்.

அந்த தோழரின் பேச்சின் அடுத்த பகுதியில் ஈழப்பிரச்சனை ஆக்கிரமித்தது. ஈழத்தில் கட்டாய சிறுவர் படையணிகளைப் போராளிகள் வைத்திருப்பது. கட்டாயமாக மக்களைத் தடுத்து வைத்திருப்பது குறித்தெல்லாம் அவர் பேசினார். சிங்கள ராணுவத்தின் கொடுமைகளைப் போல் புலிகளும் கொடுமைகளைச் செய்தார்கள் என்று சொன்னாலும்  அவர் புலிகளைக் குறிவைத்து பல செய்திகளை சொல்லிக் கொண்டே இருந்தார்.  அவர் சொன்ன விடையங்களில் புலிகளின் பல தவறுகள் நமக்கும் தெரிந்ததுதான், ஆனால் அதைத் தாண்டி மிகப் பெரும் கொடுமைகள் ஈழ மண்ணில் புதைந்திருப்பது குறித்து அவர் எதுவும் பேசவில்லை. அந்த தோழரிடம்  கேட்பதற்க்கு என்னிடம் ஒரே ஒரு கேள்வி இருந்தது. நான் எழுந்து என்னுடைய கேள்வியைக் கேட்டேன்.  இத்தனை மக்களின் அவலங்களுக்கும் காரணம் புலிகள்  என்பதாக உங்கள் பேச்சு இருக்கிறதே சரி இருக்கட்டும் இந்த தகவல்களையெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது என்றேன்.   இந்திய ஊடகங்கள் சிலவற்றின் பெயரை அவர் சொன்னார் . அவற்றில் எழுதப்பட்ட கடுரைகளையும் சில ஆங்கில தொலைக் காட்சிகளையும் கூட அவர் குறிப்பிட்டார். அதில் நிச்சயமாக” தி இந்து” என்ற ஆங்கில நாளேட்டின் பெயரும் இருந்திருக்கும் என்பதில் இதைப் படிக்கும் யாருக்கும் சந்தேகம் இருக்கது. ” தோழரே ஈராக் போரில் அமெரிக்க ஊடகங்களின் பங்கு பற்றி அத்தனை தெளிவாகப் பேசினீர்களே……. ….”  என்னுடைய இந்த கேள்விக்கு விடையளித்தால் அது விவாதமாகி அதிகம் நேரம் எடுக்கும் என்பதால் இதுகுறித்து தனியாகப் பேசலாம் அல்லது பிறிதொரு கூட்டத்தில் பேசலாம் என்ற கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் வேண்டுதலை ஏற்று நான் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

என்னுடைய இந்த கட்டுரையின் நோக்கம் சனல் 4 தொலைக்காட்சி மற்றும் அல்ஜசீராவின் பங்கு இலங்கையில் நடந்த வன்முறையையின் கொடுமைகளை வெளிக்கொண்டுவருவதில் எவ்வாறானதாக இருந்தது. எதற்க்காக இவை  ரிஸ்க் எடுத்து இந்த வேலையைச் செய்ய வேண்டும். இந்த ஊடங்களின் பின்புலம். சன்ல் 4 தொலைக் காட்சி  விசுவல் மற்றும் ஆதரங்கள் இலங்கைக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்குமா என்பது குறித்துப் பேசுவதுதான். ஆனால் ஊடக அரசியல் குறித்தும்  உடகங்கள் ஈழப் போராட்டத்தில் நடந்து கொண்ட முறைமை , இந்திய ஆங்கில ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியெல்லாம் பேசாமல்  இந்த கட்டுரையை  எழுதுவதில் எனக்கு  உடன்பாடு ஏற்படவில்லை.

சனல் 4 தொலைக்காட்சி ஈழப் போரில் இத்தனை ரிஸ்க் எடுத்து அபூர்வமான ஆதாரங்களை திரட்டியிருந்தமை ஒருவகையில் அதன் ஊடக வியாபரத்திற்க்கான ஒரு உத்திதான்.  அல்ஜசீரா தொலைக் காட்சியை உலகபழமைவாத அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தொலைக்காட்சிகளுக்கு  நிகராக மக்கள் விறுவிறுப்போடும் ஆர்வத்தோடும்  பார்க்கச் செய்தது எக்ஸ்குளூசிவ்வான  அதன் செய்திகளும் ஒசாமாவின்  முதல் காட்சிகள் மற்றும் இராக்கில் நடந்த கொடுமைகள் குறித்த ஆதாரங்களும்தான்.  இவற்றை அல்ஜசீர வெளியிட்டதன் மூலம் இலவசமான பிரச்சாரம் இந்த தொலைக்காட்சி செய்தி அலைவரிசைக்கு கிடைத்திருக்கிறது. அதிகம் பேர் இணையம்  உட்பட சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்த தொலைக் காட்சியை பார்ப்பதற்க்கு தலைப் பட்டனர்.

இன்றைக்கு ஆயுத வியாபாரிகள் மற்றும் கட்டுமான கம்பனிக்காரர்ளை போல ஊடகங்களும் வன்முறை மற்றும் போர் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றன. மக்களூக்கு ஹலிவூட் திரிலர் படங்களைப் போல  செய்திகளைத் தருவதற்க்கு அதிகம் விருப்புக் கொண்டவையாக ஊடகங்கள் இருக்கின்றன. போர்களத்தில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு அபாயகரமான சூழ்நிலையில் செய்திகளைத் தருவதற்க்கு  ஊடகங்கள் விரும்புகின்றன.  பெரும் போர்களைக் கண்டிராத இந்திய ஆங்கில ஊடகக்காரார்கள் நவம்பர் 26- மும்பாய் மீதான தீவிரவாத தக்குதலுக்கு “மும்பாயில் போர்” என்று தலைப்பிட்டு 48 மணி நேரடி ஒளிபரப்பில் நாட்டையே  தங்கள் பக்கம் திருப்பி வைத்திருந்தார்கள். இந்தனை கொடுமைகள் நடப்பதாக சொல்லிக் கொண்டே இடையிடையே பிரியங்கா சோப்ரா, டோனி வகையறாக்களின் விளம்பரங்களும் ஓடிக் கொண்டிருந்தன.

இதே வேலையை இலங்கைப் போரின் போது முக்கியமான இந்திய ஆங்கில ஊடகங்கள் சில செய்திருந்தன.  இலங்கைப் போருக்கு அவர்கள் வைத்திருந்த பெயர் “END GAME” அதாவது  முடியபோகும் விளையாட்டு.  இந்த முடியபோகும் விளையாட்டை அவர்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இலங்கை அரசின் அறிவிப்புகளையும்  புதிய படக்காட்சிகளையும் அவர்கள் ஒளிபரப்பினார்கள். புலிகளின் தலை நகரமாக இருந்த கிளீநொச்சி வீழ்ந்ததில் இருந்து  இந்த ஊடகங்கள்  இலங்கை ராணுவத்தோடும் இந்திய உளவுத்துறையோடும் சேர்ந்து பிரபாகரனைத் தேடத்தொடங்கின. “where is Prabakaran ? ” என்று தலைப்பிடப்பட்ட இந்த தேடுதலுக்கிடையில்  சுப்பிரமணியாசமி, சோ.ராமசாமி ஆகியோரர்  இந்த பேரின் நியாய தர்மங்களையும் புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்ப்தற்கான வேத,ஆகம மாகாபாரத போதனைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவற்றை மறக்காமல் ஒளிபரப்பிய இந்த காட்சி ஊடகங்கள் அவ்வப்போது மக்கள் கொல்லப் படுகிறார் என்று வேறு வழில்லமல் சொன்னர்கள். அதுவும் ஒரு கட்டத்தில் இலங்கை ராணூவம் வழங்கிய  அல்லது வேறு ஏதோ ஒரு இலங்கையின் நட்பு நாடோ பக்கத்து நாடோ கொடுத்த செய்மதிகளின் மூலம் எடுக்கப் பட்ட ராணுவத்தரப்பு வீடியோக்களை  திரும்பத்திரும்ப ஒளிபரப்பினார்கள்.

புலிகள் மக்களை துப்பாக்கி முனையில் தடுக்கும் அந்த காட்சிகளை திரும்ப திரும்ப  இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகள் சிலவற்றில் ஒளிபரப்பட்டன.அதேநேரம் மக்கள் மருதுவ வசதியின்றி வீதிகளில் பிணங்களாகும் காட்சிகள் வன்னியில் இருந்து எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டன. இந்த காட்சிகளை விட புலிகளின் தலைவர்களின் பரபரப்பு பேட்டிகளை ஒளிபரப்பவும் இந்த ஊடகங்கள் விருப்பப்பட்டன. ராணுவத்தினர்  மக்களை விடுவிப்பதற்க்காக  நடத்தும் போராகவே இந்த ஊடகங்களால் முல்லைத்தீவில் நடந்த இறுதிப் போர் சித்தரிக்கப் பட்டது. இதன் போது மக்கள் கொல்லப் ப்டுகிறார்கள் என்று சொன்னாலும்  இவர்களால் எந்த உண்மைகளையும் வெளிக் கொண்டு வரவோ சொல்லவோ முடியவில்லை.

போர்களம் வரை அழைத்துச் செல்லபட்ட இந்த ஊடகவியலாளர்கள் ராணுவ டாங்கிகளுக்குள்  பதுங்கிக் கொண்டும். இடம்பெயரும் மக்கள் கூட்டதிற்க்கு முன்னால் இருந்து கொண்டும்  நேரடிச் செய்திகள் என்ற பெயரில் இலங்கை ராணுவம் மற்றும் அரசு சொன்ன  மூலச் செய்திகளின் அடிப்படையில் தங்கள் தங்கள் ஊடகநிறுவங்களுக்கு ஏற்ற வகையில் ஒப்புவித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.அவர்கள் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும் இடத்தில்  நகர்ந்து செல்லும் பொது மக்களின் அவலம் குறித்து அவர்களால் பேச முடியவில்லை. அங்கு சென்று வந்த இந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு நிச்சயமாக நிறைய உண்மைகள் தெரிந்திருக்கும்.ஆனால் அவற்றைக் குறித்தோ அல்லது மறுக்கப்படும் ஊடக சுதந்திரம் குறித்தோ பேச முடிய வில்லை.

இதன் உச்சக்கட்டமாக பிரபாகரன் கொல்லப்பட செய்தியும்  அவரின் உடல் எனக் காட்டப்பட்ட உடலும் இலங்கையில் பட்டசு  கொழுத்தி நடத்தப்பட்ட வெற்றிக் குதுகலிப்பும் ஒளிபரப்பபட்டது. கொழும்பு நகரின் மையபகுதியில்  நடைபெற்ற களியாட்டங்களின் நேரடி றிப்போட்டுகளும்  ஒளிபரப்ப பட்டது. இதன் முடிவாக இலங்கை அதிபர் ராசபக்சவின் உரை நேரடியாக இந்திய தேசிய ஆங்கில தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பபட்டது.  இப்படி நான் சொல்வதன் பொருள் இவர்கள் மக்கள் பற்றி பேசவில்லை என்பதல்ல  எதை அதிகம் பேசினார்கள் என்பதை. பெரும்பால இந்த ஊடங்களுக்கு போராளிகளின் மீதான தாக்குதலே பிரதானமாக தோன்றியிருக்கும். இந்த நிலையில்தான்  பிபிசி யின் மென்போக்கு செய்தியிடலை மீறி இலங்கையின் உண்மை நிலையினை குறைந்தளவிற்க்காவது வெளிக்கொண்டுவரும் வேலையைச் செய்திருந்த பல வெளிநாட்டு ஊடகங்களில்  அல்ஜசீராவும் சனல் 4 தொலைக்காட்சியும்  குறிப்பிடத் தக்கவை. இவற்றின் செய்திகளின் பின்னரே இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சிகள் சில செய்திகளை வெளியிட்டன.

போர் நடக்கும் காலங்களில் தமது செய்தி அறிக்கையில்  தொடர்ச்சியாக இரண்டு பக்கத்து செய்திகளையும் மக்களின் அவலங்கலையும்  அல் ஜசீரா வும் சன4 தொலைக் காட்சியும் பதிவு செய்தன.  பாரிய  ஆயுதங்களை உபயோகிக்கப்போவதில்லை என இலங்கை அரசு அறிவித்து, அமைச்சர் சிதம்பரம் அந்த தகவலை முதலமைச்சர் கலைஞருக்கு  சொல்லி  தமிழினத் தலைவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு வெற்றிக் களிப்போடு வீடு திரும்பிய பின்னர் இலங்கையில் பாரிய மற்றும் இராசன ஆயுதங்களின் தாக்குதல்கள் நடந்ததை புகைப்பட ஆதாரங்களோடு  அல்ஜசீர மற்று சனல் 4 தொலைக்காட்சிகள் உலகிற்க்கு அறிவித்தன.  சனல்4 மற்றும் அல்ஜசிராவின் ஆதாரங்களுக்கு  பொய் சொல்ல முடியாமல் இலங்கை  வெளியுறவு செயலர் பாலித கோகண தவித்துப் போனார்கள்.

போர் நடந்து கொண்டிருந்த போது போர்பகுதியில் இருந்து  வவுனியாவுக்கு மக்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் அனைவரையும் திறந்தவெளிச் சிறைக் கூடங்கள் போன்ற முகாம்களுக்குள் இலங்கை ராணுவம்  தடுத்து வைத்திருந்தது. உச்சக்கட்டமாக போர் நடந்த போது புலிகளின் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அதாவது ராணுவப் பகுதிக்கு வருமாறு அரசு அறிவித்தது. அந்த பாதுகாப்பு பகுதி எத்தனை பாதுகாப்பு அற்று இருக்கிறது என்பதை சனல்4 தொலைக் காட்சியே முதன் முதலில் வெளியிட்டது. 2009 ,மே மாதம்  ஒளிப்பட ஆதரங்கள்  நேர்காணல்கள் என்பவற்றினை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பெண்கள் முகம்களுகுள்ளேயே  பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவது. அகதி முகாமில் உள்ள தமிழர்கள்  காணமல் போவது என்பவற்றை பொய் என இலங்கை அரசு கூறி வந்த நிலையில் சன்ல் 4 தொலைக்காட்சி யின் வீடியோ ஆதரங்கள் உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது . இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் இதனை மீள் ஒளிபரப்ப வேண்டிய நிலை உருவானது.

இலங்கை அரசின் முகாம்கள் தங்கு முகம்களல்ல தமிழர்களின் வதை முகாம்கள் என உலகிற்க்கு உணர்த்திய இந்த தொலைக் காட்சியைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களையும்  திருகோணமலையில் வைத்து இலங்கை அரச படைகள் கைது செய்தனர். இலங்கையின் பாதுகாப்பு துறை செயலர் மட்டதில் இருந்து தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும். கைது செய்து லண்டனுக்கு அனுபப்படும் வரை ஆபத்தான நிலையில் இருப்பதாகவே தாங்கள் உணர்ந்ததாகவும் அந்த ஊடகவியலாளர்கள் கூறினர்.இந்த நிலையில் சனல்4 தொலைக்காட்சி உடகவியலாளர்களுக்கு இலங்கை அரசு தடைகள் விதித்தது. தேச விரோத குற்றச் சாட்டுக்களை முன் வைத்தது. இங்கிலாந்து அரசிடம் முறையிட்டது.

ஆனாலும் தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையினை வெளிக் கொண்டுவருவதில் தனது பங்கினை சனல்4 தொலைக்காட்சி செய்தது. புலிகளின் அனைத்துலக பொறுபாளர் செல்வராசா பத்மநாதன் முதல் முதலில் சனல் 4 மூலமே வெளியுலகோடு பேச ஆரம்பித்தார். இதன் மூலம் உலகின் கவனம் சனல் 4 பக்கம் திரும்பியிருந்தது. ஒரு சிறிய நாட்டில் விடுதலைக்காக போராடும் இயக்கமாக இருந்தாலும் புலிகள் இயக்கம் என்பது உலகின் மிக வலுவான  போராட்ட இயக்கமாவே உலகம் முழுவதிலும் பர்க்கப்பட்டது. அத்தகைய சூழலில் உலகம் முழுவதில் தன்னுடைய தொலைக்காட்சியின் அறிமுகத்தையும் பிரபலத்தையும்  இலங்கை  பிரச்சனையினை அதிரடியாகக் காண்பிப்பதன் முலம் சனல் 4 தொலைக் காட்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒருவகையில்  ஊடக  வியபாரத்தின் உத்திதான். ஆனால் தமிழர்களின் நியாங்களைப் புரிந்து கொண்டு இந்த தொலைக் காட்சி செயற்பட்டிருக்கிறது என்பது அடக்கப்படும் மக்களுக்கு சார்பான ஒன்று.

செப்டம்பர் மாதத்தில் வெளியான படக்காட்சி இன்னும் உலகை உலுக்கிப் போட்டது. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல பலரையும் இலங்கை ராணுவத்தின் கோர முகத்தை உணர வைத்த அந்த காட்சிகளை வெளியிட்டதன் மூலம் தனது தொலைக்காட்சிக்கு பரபப்பையும் விளம்பரத்தையும் தேடிக் கொண்டது என்ர விமர்சனம் எழுந்தாலும் கூட, இதன் மூலம் அந்த தொலைக்காட்சி செய்திருக்கும் வேலை மிக முக்கியமானது. நிர்வாணப் படுத்தப்பட்டு பின்புறம் கைகள் கட்டப்பட்டு தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் சுடப்படும் அந்த காட்சிகள் இலங்கை அரசை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனாலும் இது போலியாக சித்தரிக்கப் பட்டது என ஆதாரங்களோடு  இலங்கை அரசு சொன்னாலும். சனல் 4 தனது செய்தியின் உண்மை தன்மையில் உறுதியாக இருக்கிறது.

இதேவேளை சனல் 4இன் தலைமை அதிகாரி அன்டி டன்கன் தமது தொலைக்காட்சி இவ்வீடியோ கிளிப்பை வெளியிட்டமை சரியான முடிவு என்றும், இதனுடைய நம்பகத்தன்மை அல்லது உண்மைத்தன்மை குறித்து எங்களால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், இவ்வாறான ஒரு விடயம் மக்களின் பார்வைக்குச் செல்ல வேண்டும் என்றே நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சி நிதிப் பற்றாகுறையில் இருக்கிறது அதானல் தனக்கு சுய விளம்பரம் தேடப் பார்க்கிறது. இதனை இங்கிலாந்து அரசு கண்டிக வேண்டும் என இலங்கை அரசு சொன்னாலும்., 1982 இல் இருந்து இயங்கி வரும் இந்த தொலைக்காட்சிக்கு இலங்கை பிரச்சனையில் தமிழ்ர்கள் பக்கத்து நியாயத்தைச் சொல்லி சுய விளம்பரம் தேடுவது மட்டும் நோக்கமாக இருக்காது. இது அந்த தொலைகாட்சிக்கு விளம்பரம் தரக் கூடியதுதான் என்றாலும் ஒரு மனித அவலத்தை உலகிற்க்கு கொண்டுவருவதில் அந்த தொலைக்காட்சி சிறப்பு கவனம் கொண்டிருக்கிரது எனபதை அதன் தொடர்ச்சியான செய்திகளும் அதன் தலமை செயல் அதிகாரியின் பேச்சுகளும் உறுதி செய்கின்றன.

மார்க் அன் ஸ்பென்ஸர் நிறுவனத்துகு எதிராக சனல் 4 தலைமை அதிகாரி பேச்சு அந்த தொலைகாட்சியின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அகற்றப் பட்டது. இலங்கைப் பொருட்களை  வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் மேற்குலகில் முன்னெடுக்கப் பட்டது.இதற்க்கு இலங்கையில் தொழிற்சாலையைக் கொண்டிருக்கும்  மார்க் அன் ஸ்பென்ஸர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பேசிய சன4 தலமை அதிகாரி இலங்கையில் உற்பத்தியாகும் ஒவ்வொரு ஆடைக்கு பின்னாலும்  படுகொலை செய்யப்பட்ட அயிரகணக்கான உடல்களுகு குருதியும்  முகம்களில் அடைக்கப்பட்டிருக்கு 300 000 மக்களின் அவலமும் இருக்கிறது என்றார். இவரின் இந்த பேச்சு  வர்த்தக நிறுவனங்களை தாக்குவதாக இருந்தால் அது நிச்சயமாக   சனல்4 இன் விளம்பர முகாமைக்கு சிக்கலானதே.

இங்கிலாந்தின் புகழ்மிக்க தொலைக்காட்சி அலைவரிசையான சன்ல் 4 தொலைக்காட்சியின்  பொழுபோக்கு தொலைக்காட்சி சேவை நடத்தும் ‘பிக் பிரதர்’  நிகழ்ச்சி மிகப் பிரபலமானதும்,. நம் இந்தியர்களுக்கும் தெரிந்ததுதான். இது தவிர இன்னும் சில உப அலைவரிசைகளையும் ம்சனல் 4 கொண்டிருக்கிறது.பழமைவாத பிபிசி போன்ற நிறுவனங்களுக்கு மாற்றன இந்த தொலைகாட்சியின் பார்வையாளர் வீச்சு எப்போதும் அதிகமானதே. அத்தகைய ஒரு மேற்குலக தொலைக்காட்சி தமிழர் உரிமைகள் குறித்து  கவனம் செலுத்துவது தமிழர்களின் போராட்டத்துக்கும் . அடக்கப்படும் தமிழர்களைக் காப்பதற்க்கும்  மிக அவசியமானது. ஆனால் இந்த தொலைக்காட்சி ஆதரங்கள் மூலம் மட்டும் இலங்கை அரசை கிரிமினல் குற்றவாழியாக்கிவிட முடியாது. ஆனாலும் உலகின் கவனத்த திருப்புவதற்க்கு  இது உதவும்.

குறிப்பு: ‘உன்னதம்’ இதழுக்காக எழுதிய கட்டுரை. குளோபல் தமிழ் நியூஸ் தளதில்  மறுபதிவானது.

சயந்தன்,மயூரன்,தமிழ்மணம்,முதல் வலைப்பூ

கணனி குறித்த போதிய அனுபவம் அல்லது அறிவு அற்றவனாகவே நான் இருந்து வந்திருக்கிறேன். பயன் பாட்டுக்கான அல்லது தேவைக்கான அறிவைத் தாண்டி புதிது புதிதாக கணணியில் தேடிக்கொண்டிருக்காத ஒரு காலத்தில் புதிது புதிதாக எதாவது ஒன்றை தினமும் சொல்லிக் கொண்டிருப்பான் சயந்தன். 2002 இல் ஒருநாள்  இணையத்தளம் ஆரம்பிப்பது அத்தனை சிரமம் கிடையாது என்று எழுநா இணையத்தை சயந்தன் ஆரம்பித்தான்.நான் முதன் முதலில் இணையதில் எற்றுவது குறித்த குறைந்த பட்ச அறிவை அப்போதுதான் கற்றுக் கொண்டேன்.

தினமும் சயந்தன் புதிது புதிதாக ஏதாவது சொல்லுவான். திடிரென புலிகளின் குரல் செய்தியை எழுநாவில் பதிவேற்றி புரட்சி செய்தான். நான் பத்திரிகைகாரனாக இலங்கை முழுவதும் பெரும்பாலன நாட்களில் சுற்றிக் கொண்டே இருந்த போது என் மின்னஞ்சல் பார்ப்பது முதல் இணையம் தொடர்பான தகவல்களில் பெரும்பங்கை அன்றைய  தகவல் தொழிநுட்ப இளங்கலை மாணவரான( இண்டைக்கு வரைக்கும் இது பொருந்தும்தானே சஜி?) சயந்தனே கவனித்துக் கொண்டிருந்தார்.  இது தவிர சில பல பாலான பாலான படங்களின் வீடியோக்களை கிரடிற் காட் மூலம் காசு குடுக்காமல் தரைவிறக்கும் தொழில்நுட்பமும் சயந்தனுக்கு கைவரப் பெற்றதால் எனக்கும் ராகுலனுக்கும்  இலவசமாக ……பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்த முன்னுரையோடு  என்னை வலைப்பூக்கு வந்த அனுபவம் பற்றி எழுதச் சொன்ன சினேகிதி, கலையரசி அக்கா உள்ளீட்டோருக்கு நன்றிகளை உரித்தாக்கி( சப்பா…) எனது கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

எனக்கு  கணனி என்கிற ஒன்று கண்ணு முன்னால் வந்தது பத்தாவது படிக்கும் போதுதான் அதுவரை பேப்பர்களில் பார்த்த கணனியை நேரடியாகப் பார்த்தோம்.மட்டக்களபில் எங்கள் பாடசாலைக்கு கணனி வந்திருந்தது. ஏசி போட்ட கண்ணாடி அறைக்குள் இரண்டு கணனிகள் வைக்கப்பட்டிருந்ததன.அதன் பின்னர் நாங்கள் உயர்தரம் படிக்கும் போதுதான் எங்களுக்கு அந்த காண்ணாடி அறைக்குள் இருந்த கணனிகளை உபயோகப் படுத்த முடிந்தது. கறுப்பு  வெள்ளை திரை கொண்ட கணனி ஒன்றும் கலர் திரைக் கணனி ஒன்றும் இருந்தது. ‘வடை’ என செல்லமாக எங்களால் அழைக்கப்பட்ட பெளதீகவியல் ஆசிரியர் இலங்கேஸ்வரன் சேர் தான் கணனித் துறைக்கும் பொறுப்பு. வேட் மற்றும் எக்ஸல், டொஸ் (அப்ப விண்டோஸ் சொல்லித்தரல) என்பவைதான் நாங்கள் முதலில் கற்றுக் கொண்டது.

மட்டக்களபில் 1997 க்கு பின்னர் படிப்படியாக நிறைய கணினி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நாங்கள் பாதுகாக்கப்பட்ட பொலித்தீன் பைகளுக்குள் புலப்பி டிஸ்க்குகளை எடுத்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தோம். எங்கள் கையெழுத்துப் பத்திரிகைகள் ரோனியோ பிறிடிங்கில் இருந்து கொம்பியூட்டர் பிறிண்டிங்குக்கு மாறியது. இந்த காலத்தில் இணையத்தளம் மின்னஞ்சல் போன்றவையும்  அறிமுகமாகின. slt.net or .lk  போன்றன மின்னஞ்சல் முகவரி  தாங்கி வந்தன. இணையமும் மின்னஞ்சலும் வைத்திருக்கும் பலர் மட்டக்களப்பில் உருவாகினர்.  இதன் தொடர்ச்சியில் 2000 த்தில் மட்டக்களப்பை விட்டு வெளியேறியபோது நானும் மின்ஞ்சல் முகவரி வைத்திருந்தேன்.

முதலாவதாக நான் ஆரம்பித்தது hotmail பின்னர்  yahoo. இன்று வரைக்கும்  அவை இரண்டும் என் பயன்பாட்டில் இருக்கிறன. இணையதில் தேடினால் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன என்ற தகவல் எங்களுக்கு வந்து சேர இணையம் வைத்திருந்தவர் வீட்டுக்குச் சென்று முடிந்தவரை தேடினோம். ஆனால் அடுத்த முறை அவர்கள் வீட்டுக்குப் போகவே முடியாதபடி அவர்களின் தொலைபேசி பில் எகிறியது. இப்படியாக நான் கணனி கற்றுக் கொண்டு(?!) கொழும்பு வந்திருந்த போது நான் வேலை செய்த அலுவலகத்தில் எனக்கு ஒரு கணனி இருந்தது. இணையத்தில் உட்காருவதில் எந்த தடையும் இல்லை.

இதில இன்னொன்றையும் சொல்லியாகணூம்.அப்பெல்லாம் எல்லாரும் கொம்பியூட்டர் படித்தார்கள். தங்கள் பிள்ளை கொம்பியூட்டர் படிக்கிறான் என பெற்றொரும் பெருமையாக சொல்லிக் கொண்டனர். என்ன செய்யுறாய் எண்டதுக்கு கொம்பியூட்டர் கிளாஸ் போறன் எண்டு யாரவது பதில் சொன்னால் அதற்க்கு எங்களிடம் வேறு அர்த்தம் இருந்தது. ஒன்று வெளிநாட்டுக்குப் போவதற்க்கு ஏஜென்சிக்கு காசு கொடுத்து அல்லது ஸ்பொன்சர் மூலம் விசா கிடைக்கும் என்று காத்திருப்பவர்கள் அல்லது அண்ணனோ அக்காவோ வெளீநாட்டில இருந்து காசு அனுப்ப இங்க வேலை வெட்டிக்கு போகாமல் இருப்பவர்கள்  என்று இரண்டு அர்த்தங்கள் இருந்தது. 80 வீதத்திற்க்கு மேல் இது பொருந்தும்.

இதுல இந்தியாவில பிரபலமான கணனி நிறுவனமெல்லாம்(இந்தியாவுக்கு வந்த பிறகு உண்மை வேறு) இலங்கையில் வந்து 80 வீதம் ஸ்கொலசிப் கொடுத்து கணனி கற்றுக் கொடுத்தார்கள். நான் கூட அப்பிடியொரு ஸ்கொலசிப்க்கான  பரிட்சை எழுதி பாஸ் எல்லாம் ஆகி பெருமையா நாலு பேருட்ட சொன்ன போதுதான் தெரிந்தது எல்லாருமே 80 வீதம் எடுத்து ஸ்கொலசிப்  இல் தேர்வானது. அடபாவிகாளா 4000  கட்டணத்துக்கு 10000 எனச் சொல்லி விட்டு 50% ஸ்கொலசிப் பாடப் புத்தகம் வேறு என்று விளம்பரமாட பண்ணுறீங்க.?

கொழும்பு மெசஞ்சர் வீதி வீட்டில் தங்கியிருந்த நாட்களில் ( இந்த நாட்கள் பற்றி கண்டிப்பாக ஒரு பதிவு  போட வேண்டும்) நான் சில இணைய செய்தித் தளங்களுக்கு இலங்கை செய்திகளை வழங்குபவராக இருந்தேன். பலபகுதிகளிலும் இருந்து வரும் செய்திகளை அனுப்ப வேண்டிய வேலை அதேநேரதில் புதிதாய் லண்டனில் ஆரம்பித்த ஒரு தொலைக்காட்சிக்கு செய்தி அறிக்கை தயாரிக்க வேண்டும். கணனியில் எனக்கு தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாததால் பாமினியில் தட்டச்சு செய்யும் ஒருவரின் மூலம் தட்டச்சு செய்து செய்திகள் அனுப்பட்டது. அப்போது பாமினிக்கு மாற்றாக ஈ-கலப்பையை உபயோகப் படுத்துங்கள்  என்று குறிப்பிட்ட நிறுவனதில் இருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது.  ஈ- கலப்பையை தரைவிறக்கி நான் தங்கியிருத மெசஞ்சர் வீதி வீட்டின் உரிமையாளர் மயூரனிடம் கொடுத்தேன்.

எப்போதும் கணனியோடு பூட்டிய அறையினுள் இருக்கும் நண்பர் மயூரனிடம் இதை எப்படி உபயோகிப்பது என்று பார்த்துச் சொல்லுங்கள் எனச் சொன்னேன். அவர் இராப்பகலா பூட்டிய அறைக்குள் உட்காந்து கற்றறிந்து வெளியே வந்தார்.’ இதைத் தான்  நான் தேடிக் கொண்டிருந்தேன்.” இதை வச்சு அப்பிடி செய்யலாம் இப்பிடிச் செய்யலாம் என்றார்.  நீங்க கஸ்டமில்லமல் ரைப் பண்ணலாம் என்றார்(இது மட்டும்தான் எனக்கு தெளிவாக புரிந்தது).  இப்போது வரை நான் ஈ-கலப்பையிலேயே  தட்டச்சுகிறேன். எனக்கு எந்த எழுத்துருவும் இதுவரை தெரியாது. நண்பர் ‘சரிநிகர்’ சிவகுமார் பாமினி கற்றுக் கொண்டு தட்டச்சுமாறு பலமுறை கூறியும் அதில் தேற முடியல.

2004 இல்  நான் இந்தியாவுக்கு பயணமானேன். 8 மாதம் இந்தியா 4 மாதம் இலங்கை என்ற வாழ்வு தொடங்கியது.( இப்போது 12 மாதங்களும் இந்தியாவேதான் என்றாகிவிட்டது ) சயந்தன் இப்போது ஒரு வலைப்பூ ஆரம்பித்துவிட்டிருந்தார் மயூரனும் ஆரம்பித்திருந்தார். 2004 இறுதியில் கொழும்பு வந்த போதும் அதே மெசஞர் வீதி மயூரன் வீட்டில் இருந்த நான் முன்னர் தங்கிய அறை காலியாக இருந்ததால்  அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது மயூரன் மற்றும் சயந்தன் இருவரும் புளக் ,வலைப்பூ, தமிழ்மணம் , காசி  என  நிறையப் பேசுவார்கள். அப்போது மிகக் குறைவானவர்களே தமிழ்மணத்தில் இருந்ததால் அவர்கள் எழுதும் சுவாரஸ்யமான விசயங்கள் அது இது என பேசினார்கள்.

அப்போதுதான் எனக்கு வலைப்பூ மற்றும் தமிழ்மண அறிமுகம் கிடைத்தது. சோமி நீங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பியுங்கள். நீங்கள் பத்திரிகைக்கு எழுதும் கட்டுரைகள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என மயூரன் சொன்னர். சயந்தன் எனக்கு வலைப்பூ ஆரம்பித்துத் தருவதாகச் சொன்னான். அதற்க்குள் மயுரன் தானே என்ன அழைத்துச் சென்று வலைப்பூ ஆரம்பித்துக் கொடுத்தார். முதல் இடுகையைத் தட்டச்சு செய்ததும் மயுரனே( நன்றி மயூரன்). மயூரன் இன்னும் சிலதுகளும் செய்திருக்கிறார்(?!).

என்னால் உடனடியாக தொடர்ந்து பதிவிட முடியாமல் போனது. சுனாமியைத் தொடர்ந்து  நான் மேற்க் கொண்ட தொடர் பயணங்கள் அனுபங்கள் நேரடி அனுபங்கள் என எதையும் வலைப்பூவில் பதிவு செய்ய நேரம் இருக்க வில்லை. பத்திரிகைகளுக்கும் இணையத் தளங்களுக்கும் எழுதுவதற்க்கே நேரம் சரியாக இருந்தது.உண்மையில் என்னைப் போன்று அலைந்து கொண்டிருப்பவர்களால் புளக் எழுதுவது அத்தனை சாத்தியமானதாக அப்போது இருக்கவில்லை. இப்போது வயர்லஸ் இணைய இணைப்பு லாப்டாப் என்பவை மிக இலகுவாக கைக் கெட்டுகையில் இது ஓரளவுக்கு சாத்தியம். எனக்கு மெயில் செக் பண்ணுவது போட்டோகளை பத்திரிகை மற்றும் இணையத்துக்கு அனுப்புவது என்பவற்றுக்கே இணைய தொடர்பு வசதி பெறுவது கடினமாக இருக்கும்.

இந்தநிலையில் சயந்தன் சொல்லுவான் என்பதை விட நச்சரிப்பான்..சோமி ஒரு நாளைக்கு அம்பாறை மட்டக்களப்பு என சுத்துறாய் 2 நாளில கிளிநொச்சில நிக்கிறாய்  .உதுகளையெல்லாம் எழுதலாமே ..  இஞ்ச தமிழ்மணத்தில உப்பிடி யாரும் இல்லை. எல்லாரும் ரூமுக்குள்ள  இருந்து கொண்டு அனுபவம் எழுதுறவங்கள்தான்… என சயந்தன் சொல்லிக் கொண்டே இருப்பான். என்ன கடந்த 5 வருசாமா சயந்தனும் நம்பிக்கையைத் தளரவிடாமல் சொல்லிக் கொண்டிருக்கான்.

ஈழத்தின் சமாதானப் பேச்சுக் காலத்தின் எந்த வலிகளையும் எழுதாமல், யாழ்ப்பாணத்தில் குளிர்களி சாப்பிட்டது, பிரபாகரன் தந்த புட்டு நல்லாயிருந்தது. புலிகள் அரசினைப் பாருங்கள்.  ஜாப்னா ரிப்……. என ஆரம்பித்து உள்குத்து வெளிக் குத்து…நீ துரோகி ….என குந்தியிருந்து வம்பளக்கும் இடமாக தமிழ்மணமும் வலைப்பூகளூம் இருப்பது போல எனக்கு தோன்றியது. இவை எல்லாமும் சேர்ந்து எனக்கு எழுத வேண்டும் என்ற உந்துதலைத் தராது போயின. ஆனால் 2005 இறுதியில் வலைப்பூகள் நிரகரிக்க முடியாத ஒன்று என்பதையும்  இன்றைக்கு நண்பர்களோடும் என் தலைமுறையினரோடும் கலந்துரையாடவும் பகிர்ந்துரையாடவும் வலைப்பூக்கள் அவசியம் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

2006 இல் கிளிநொச்சி சென்ற போது ( அப்பதான் அகிலனை முதல் தடவையாகப் பார்த்தேன்.அப்போது அவர் வலைப்பூக்கு வரவில்லை) கவிஞர் கருணாகரனிடமும் நண்பன் தவபாலனிடமும்  இது குறித்து பேசிய போது தவபாலன் இது தேவையற்றது என்றார். சும்மா சள் அடிக்கிறதுக்குதான் இது சரி வரும். அதுவும் உண்மைதான் தவபாலன் போன்றவர்கள் களத்தில் இருந்து பதிவு செய்த (நிறுவனம் சார்ந்தல்லாமல் தனிப்பட்ட முறையில்) புகைப்படங்கள்  மிக முக்கியமானவை.  சமாதானகாலத்தில் புளக் எழுதிய பலருக்கும் அது பற்றிய போதிய விழ்ப் புனர்வு இல்லைத்தான்.

இவ்வாறாக போய்க் கொண்டிருக்கையில் நான் வருசத்துக்கு 5 பதிவு மட்டும் போடும் பதிவராக இருந்தேன். ஆனால் தொடர்ச்சியாக தமிழ்மனத்துடன் தொடர்பில் இருந்தேன்.இத்தகைய சூழலில் 2006 இல் தமிழவன் என்னும் பெயரில் ஒரு புளக் எழுதினேன். அப்போது 4 மாதம் கொழும்பில் இருந்து எழுதியதால் என் பெயரில் எழுத முடியவில்லை. பின்னர் சோபாசக்தியை சந்திக்கையில் தமிழவன் என்னும் பெயரிலும் புளக் எழுதும் சோமிதரன் என்றார். அடபாவிகள் நாம புனைப் பெயரில எழுதினாலும் கண்டு புடிச்சிர்ராங்களே….அதுக்குமேல அந்த புளக்க  நன் உபயோகிக்க முடியாதபடி புள்க் மற்றும் கூகிள் செய்த சதியில் புளக் காணமல் போனது. ஆனால் என்னுடைய சொந்த புளக் சேதாரமில்லாமல் தப்பியது. இதே நேரம் என் தோழி ஒருவர் கொடுத்த அழுத்தங்களும் நண்பர் என்பவரின் கீழ்தரமான பிரச்சாரங்களும் எனக்கு என் புளக் எழுதுவதற்க்கு விருப்பமற்ற வெறுப்பையே தந்தது.

உண்மையில் ஒருவரை ஒரு வசைபாடும் கொஞ்சைபடுத்தும்  செயற்பாடுகளுக்குமான கிரிமினல் வலைத்தாளமாகவும் புளக் இருந்தது. கடந்த 5 வருடத்தில் வலைப்பூக்கள் பல்வேறு  முகங்களையும் கொண்டிருந்த்தன. ஆனால் எமது தலை முறைக்கு வலைப்பூக்களூம் ருவிற்றர் மற்றும் பேஸ் புக்குகளுமே  தொடர்புக்கான பெரும் தளம்.

ரொம்பத்தான் நீளுது போல…இருந்தாலும் இன்னும் சில…

.  சயந்தனும் நானும் முதன் முதலில் வலைப்பூவில் ஒலி உரையாடல் செய்தது

. தூயா எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தது

.சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் பாலபாரதி யிடமே யாரய்யா அது பாலபாரதி எனக் கேட்டது

.வரவனையான் போன்ற நண்பர்கள் குடிக்க கிடைத்தது

. விடிய விடிய குடித்துக் கொண்டே நானும் வரவனையும்  சயந்தனோடு ஒலிப்பதிவு செய்தது.

. மலைநாடன்,திரு  போன்ற முக்கியமானவர்களை  நேரில் சந்தித்தது

. மலைநாடன் முயற்சியால் கானபிரபா,கலையரசி,பாரிஸ் யோகன்,விஜெ,சயந்தன், போன்றவர்கள் எரியும் நினைவுகள் படத்துக்கு அவசியமான நேரத்தில் உதவி செய்தது.

.பெயர் சொல்ல இங்கு இடமில்லாதவாறு சினெகிதியில் ஆரம்பித்து…………………………நீளும் ஒரு நண்பர்கள் பெயர்ப் பட்டியல் இருக்கிறது.

.எரியும் நினைவுகள் திரையிடலுக்கு பாலபாரதி தலைமையில் குவிந்த புளக்கர் அணி

. கொழுவி என்ற பெயரில் இருக்கும் வலைப்பூக்கும் எனக்கு சம்பந்தமிருக்கு என சிலர் நினைத்து  என்னை குறிப்பிடுத் தாக்கியது( சத்தியமா சயந்தன் குறிப்பிட்ட அந்த கட்டுரையைக் கூட நான் வாசிக்கல மச்சான்).

. நண்பர் டிசே போன்ற எனக்கு பிடித்தமான நண்பர்களைத் தொடர்ந்து வாசிப்பது

இப்படி சொல்ல சொல்ல முடிவில்லா எத்தனையோ விசயங்கள் இந்த வலைப்பூ கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒரு காலதில் நானும் சயந்தனும் புளக் பற்றியே அதிகம் அலட்டிக் கொண்டிருப்பம்.. இப்ப சயந்தன் உரு வாக்கியிருக்கும் புதிய தளத்துக்கு வந்திருக்கிறேன். கசப்பு நிறைந்த பழைய தளத்தை விட எப்போதும் என்னில் அக்கறை கொண்டிருக்கும் சயந்தன் உருவாக்கி தந்திருக்கும் இந்த தளம் என்னை எதாவது எழுதச் சொல்லும். முடியுமானால் நான் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை தட்டச்சி பிரசுரிக்க முயல்கிறேன். ஏனெலில் அவை அனத்தும் ரணீல் காலத்து சமாதானத்தை மீளப் பார்க்கும்.

குறிப்பு :  யாரையும் பெயர் குறிப்பிட்டு அழைக்கவில்லை. யார் வேண்டுமானலும் வராலாம்.

Stop the War on Journalism in Sri Lanka

இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும்  ஊடகத்துறையினருக்கு எதிரான சிறிலங்கா அரச பயங்கரவாதம் குறித்து  கடந்த 6 மற்றும் 7 ம் திகதிகளில் நேபாளத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை.

Media Release: Sri Lanka September 8, 2009

Statement of the South Asia Media Solidarity Network

Stop the War on Journalism in Sri Lanka

The following statement was issued by members of the South Asia Media Solidarity Network meeting in Kathmandu, Nepal, on September 6-7. We, the representatives of journalists’ unions and associations in the South Asian region, meeting on the platform of the South Asia Media Solidarity Network (SAMSN), express our deepest concern over continuing violations of media rights in Sri Lanka, and call on the government of the country to uphold the international human rights covenants it is party to. We are shocked by the August 31 verdict of the Colombo High Court, sentencing J.S. Tissainayagam, a widely respected journalist and human rights defender, to 20 years’ rigorous imprisonment on terrorism charges. We note that world press freedom bodies and the diplomatic community have with virtually one voice condemned the trial and sentencing of this Tamil journalist, whose concerns embraced all causes and all ethnic communities of Sri Lanka. An already bad situation for journalism in Sri Lanka has turned markedly worse this year, with the daylight murder of Lasantha Wickramatunge, editor of the Sunday Leader, in a busy suburb of Colombo on January 8. Investigations into his murder have made little progress, amid a number of contradictory statements from the government and security agencies. The month of January saw an arson attack on the facilities of the independent broadcaster Sirasa TV and a knife attack on a newspaper editor and his wife in Colombo. There was in the same month a near-lethal assault on a newspaper editor in the eastern town of Batticaloa and an arson attack on his premises. In February, Sudar Oli editor N. Vidyatharan was snatched from a family function in a kidnap-style arrest. He was publicly charged with being a “terrorist” by top officials of the Sri Lankan Defence Ministry. Held without charge for three months, he was released unconditionally on court orders. On June 1, Poddala Jayanta, General Secretary of the Sri Lanka Working Journalists’ Association (SLWJA), was seized by what seemed a professional hit squad as he was on his way home in a suburb of Colombo. He was hustled into a van and brutally assaulted, suffering multiple fractures, contusions and other injuries, before being thrown out, unconscious, in an open field. Jayanta had been attacked by name over state-owned print and electronic media over the preceding weeks, for his alleged sympathy for terrorism. These aside, there have been a number of verbal threats against journalists and media workers by ministers and other senior persons in government. Several of Sri Lanka’s most well-known journalists have left the country fearing for their lives. We express our solidarity with these journalists and urge the international community to be attentive to their needs for honourable treatment in secure locations, till conditions are appropriate for their safe return to their home country. We believe that this is a responsibility that all countries in South Asia – especially India, the largest country with the longest established democratic traditions – will particularly have to bear. We request the institutions that employed the exiled journalists to support them to the extent that their capacity permits, and allow them on their return to Sri Lanka to resume their profession without any impediment. This year has also witnessed an escalating trend of verbal abuse, followed by administrative action against journalists. On February 1, the Defence Secretary, Gotabaya Rajapaksa, issued a warning that foreign media organisations would face “dire consequences” and be “chased out” of the country if they did not behave “responsibly”. He accused three international news organisations in particular of partisan reporting on the situation regarding civilian casualties and suffering in areas of conflict between government forces and Tamil separatist insurgents. Since then, the residence permit of the bureau chief of an international news agency was prematurely terminated, in evident retaliation for a series of reports he had filed on the humanitarian consequences of the war. Access to the north of the country has been severely curtailed for years and remains so over three-and-a-half months since the war ended, so that the stories that ordinary people have to tell about the last days of the war remain unknown to the world. We are especially worried at the refusal of the Sri Lankan authorities to allow independent media access to the camps set up in the north of the country for people displaced in the last phases of the war. We remind the Sri Lankan Government that the public in Sri Lanka and elsewhere has the right to be informed, through independent reporting, of the humanitarian consequences of its military operations and the prospects of an estimated 280,000 internally displaced people for resettlement and rehabilitation. We note with alarm that three journalists from the Sinhala-language weekly Irida Lanka have been detained by the Terrorism Investigation Division of the Sri Lankan police and that official spokespersons are putting out charges of their involvement in an assassination plot. We urge the Government of Sri Lanka to repeal its Prevention of Terrorism Act, which was introduced, ostensibly as a temporary measure, in 1973. Till necessary legislative changes are made, we demand that all cases registered under the law, which have had a chilling effect on the right to free speech, be kept in abeyance. We underline our solidarity with the five main bodies of journalists in Sri Lanka: the Free Media Movement (FMM), the Sri Lanka Working Journalists’ Association (SLWJA), the Federation of Media Employees’ Trade Unions (FMETU), the Sri Lanka Muslim Media Forum (SLMMF) and the Sri Lanka Tamil Media Alliance (SLTMA). These organisations form a coalition that should be strengthened and allowed to operate in an environment free from fear, in the wider cause of press freedom and the public right to know. For further information contact IFJ Asia-Pacific on +612 9333 0919